மருத்துவமனையில் இடமில்லை... அமெரிக்காவில் கோமா நிலையில் கனடா லொறி சாரதி
அமெரிக்காவில் கோமா நிலையில் சிகிச்சையில் இருக்கும் கனேடிய லொறி சாரதி ஒருவரை ஏற்க உள்ளூர் மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்ராறியோவின் Etobicoke பகுதியை சேர்ந்த லொறி சாரதி அலி அஹமத், கடந்த டிசம்பர் மாதம் டெக்சாஸ் வழியாக பொருட்களை கொண்டுசெல்லும் வழியில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
அங்குள்ள அவசர மருத்துவ உதவி ஊழியர்கள் அவரை ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். அங்கே அவருக்கு பல்வேறு அறுவைசிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிரார்.
அவர் பிழைத்துக் கொண்டாலும், தற்போதும் கோமா நிலையில் உள்ளார். இந்த நிலையில், மருத்துவ காப்பீடு ஏதும் இல்லாததால், நாளுக்கும் 1000 டொலர் வரையில் கட்டணமாக செலுத்தும் நிலை உள்ளது எனக் கூறி அவரை கனடாவுக்கு மீட்டு வர நண்பர்களும் உறவினர்களும் முடிவு செய்துள்ளனர்.
இதன்பொருட்டு, 22,500 டொலர் தொகை திரட்டி தனியார் விமான ஆம்புலன்ஸ் சேவையும் பதிவு செய்துள்ளனர். ஆனால், தற்போது கடைசி கட்டத்தில் Etobicoke பொது சுகாதார மையம் படுக்கை வசதி இல்லை என கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இதனால், குறித்த சாரதி ஆர்கன்சாஸ் பல்கலைக்கழக மருத்துவமனையிலேயே சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஓமிக்ரான் பரவல் காரணமாக ஒன்ராறியோவின் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதே நிலை நீடிப்பதாகவே கூறப்படுகிறது.