சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: ஒன்டாரியோ பொலிஸ் அதிகாரி மீது வழக்கு
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையை அடுத்து, கனடாவின் ஒன்டாரியோ மாகாண பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் சந்தேகநபரின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர்.
ஒன்டாரியோவின் அலிஸ்டன் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, பல மின்னணு சாதனங்களை பொலிஸார் கைப்பற்றினர்.

இந்த விசாரணையின் முடிவில், 54 வயதான சார்ஜன்ட் கிறிஸ் வைஸ் என்பவர் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான பொருட்களைப் பார்வையிட்டமை மற்றும் கைவசம் வைத்திருந்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கிறிஸ் வைஸ் 28 ஆண்டுகள் பொலிஸ் பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் எனவும், தற்போது அவர் வேறு காரணங்களுக்காக விடுப்பில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு எதிரான வழக்கு அக்டோபர் மாத தொடக்கத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விசாரணை தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், பொலிஸாரையோ அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.