இளைஞர் உயிரிழந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் உட்பட மூவர் மீது குற்றச்சாட்டு
2025-ஆம் ஆண்டு மே மாதம் 19 வயதான ரோக்கோ ரெனாட் என்பவர் உயிரிழந்த வழக்கில், நீதிக்கு இடையூறு விளைவித்ததாக கிரேட்டர் சட்பரி காவல்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் மூன்றாவது நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2025 மே 23 அன்று லைவ்லி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டுமானத் தளம் ஒன்றில் ரெனாட் சடலமாக மீட்கப்பட்டார்.
கார்பன் மோனாக்சைடு நச்சுத்தன்மையே அவரது உயிரிழப்புக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. இந்த மரணம் தொடர்பாக இதுவரை மொத்தம் ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக இரண்டு நபர்கள் மற்றும் ஒரு நிறுவனம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சட்பரி காவல்துறை அதிகாரிகளான சார்ஜென்ட் ஜேசன் போனிஷ் மற்றும் கான்ஸ்டபிள் அலெக்ஸ் பாலோவே ஆகிய இருவர் மீதும் நீதிக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை அறிவித்தது.
பாலோவே மீது நவம்பர் 9 அன்றும், போனிஷ் மீது நவம்பர் 10 அன்றும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக லைவ்லி பகுதியைச் சேர்ந்த 46 வயதான கிறிஸ் பெர்குசன் என்பவர் மீதும் நவம்பர் 9 அன்று நீதிக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சட்பரி காவல்துறையின் கோரிக்கையை ஏற்று, இரண்டு அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருந்ததால் ஒன்ராறியோ மாகாண காவல்துறை இந்த விசாரணையை மேற்கொண்டது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வரும் ஜனவரி 6-ஆம் திகதி சட்பரியில் உள்ள ஒன்ராறியோ நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
இந்த விசாரணை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 1-888-310-1122 என்ற எண்ணில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.