கனடாவில் 107 வயது மூதாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம்
கனடாவின் பார்ஹேவன் பகுதியைச் சேர்ந்த மரியன் ஆண்டர்சன் என்ற மூதாட்டி நேற்றைய தினம் தனது 107வது பிறந்தநாளை உறவினர்களும் நெருங்கிய தோழர்களும் சூழக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பலர் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக மூதாட்டி மரியன் தெரிவித்துள்ளார்.
1918ஆம் ஆண்டு பிறந்த ஆண்டர்சன், 1940இல் ஒட்டாவாவில் சிகை அலங்காரப் பணியைத் தொடங்கினார்.

அங்குதான் தனது கணவரை சந்தித்ததாகவும் இருவரும் சேர்ந்து மூன்று மகன்களை வளர்த்து, வெஸ்ட்பரோ மற்றும் கார்லிங்வுட் பகுதிகளில் வாழ்ந்தாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன் தோல் பராமரிப்பு பழக்கம் தான் வயதுக்கு குறைவாகத் தோற்றமளிக்கச் செய்தது என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
“முகத்தில் அதிக சோப்பை பயன்படுத்த வேண்டாம்; அது சுருக்கங்களை உண்டாக்கும்,” என குறிப்பிட்டுள்ளார்.
விழாவில் அவரின் குழந்தைகள், பேரக்குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ்ந்தனர். மரியன் ஆண்டர்சன் தனது வாழ்க்கையில் பல வரலாற்றுச் சம்பவங்களை நேரடியாக கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.