கனடாவில் தபால் பொதிகளை களவாடிய 8 பேர் கைது
னடாவில் தபால் பொதிகளை களவாடிய எட்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 450-க்கும் மேற்பட்ட திருடப்பட்ட தபால் பொருட்களை பீல் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிரெடிட் கார்டுகள், காசோலைகள், அரசு அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை மீட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 400,000 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை ஹால்டன் போலீஸ் (Halton Police) மற்றும் கனடா போஸ்ட் (Canada Post) இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய “Project Undeliverable” என்ற சிறப்பு நடவடிக்கையின் பகுதியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசாரணையில், ஒரு குழுவினர் இணைந்து வீட்டு தபால் பெட்டிகளை குறிவைத்து திருட்டு நடவடிக்கைகள் நடத்தியது கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பீல் பிராந்தியத்தில் 2025 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடந்த தபால் திருட்டு சம்பவங்களின் வரைபடத்தையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
செப்டம்பர் 8 மற்றும் 9 திகதிகளில், ரெய்ன்பேங்க் தெரு, பிராண்டன் கேட் டிரைவ், ட்விகின் அவென்யூ, கிட்ரிட்ஜ் டிரைவ் உள்ளிட்ட மிசிசாகா பகுதிகளில் பல வீடுகளில் போலீசார் தேடுதல் நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையில் 465 தபால் பொருட்கள், அதில் 255 காசோலைகள், 182 கிரெடிட் கார்டுகள், 35 அரசு அடையாள அட்டைகள், 20 பரிசு அட்டைகள் (gift cards) ஆகியவை கைப்பற்றப்பட்டன.
சுமன்ப்ரீத் சிங், குர்தீப் சட்டா, ஜசன்தீப் ஜட்டானா, ஹர்மன் சிங், ஜசன்ப்ரீத் சிங், மன்ரூப் சிங், ராஜ்பீர் சிங், உபிந்தர்ஜித் சிங் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.