பிள்ளைகளுக்கு 'இ-ஸ்கூட்டர்' பரிசளிப்பதற்கு முன் பெற்றோர் பலமுறை சிந்திக்க வேண்டும்: எச்சரிக்கை
பிள்ளைகளுக்கு மின்சார ஸ்கூட்டர்களை பரிசாக வழங்குவதற்கு முன்பு பெற்றோர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என டொராண்டோ காவல்துறைத் தலைவர் மைரன் டெம்கிவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒழுங்குமுறைப்படுத்தப்படாத இத்தகைய சாதனங்களால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தெளிவாகச் சொல்லப்போனால், டொராண்டோவில் சாலைகள், நடைபாதைகள் அல்லது சைக்கிள் பாதைகள் என எதிலும் இ-ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இவற்றைக் கட்டுப்படுத்த முறையான சட்ட விதிமுறைகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சைக்கிள்களுக்கு சைக்கிள் பாதைகளில் மட்டும் அனுமதி உண்டு; ஆனால் நடைபாதைகளில் அனுமதி இல்லை. இது மிகவும் குழப்பமான ஒரு சூழலாகவே உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். சில இ-ஸ்கூட்டர்கள் அதிவேகத்தில் செல்லக்கூடியவை என்பதால், அவற்றின் ஆபத்துகள் குறித்து பாடசாலைகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவை சட்டபூர்வமானவை அல்ல என்பதாலும், ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதாலும், பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று வரவும், குடியிருப்புப் பகுதிகளில் ஓட்டவும் எதை வாங்கிக் கொடுக்கிறோம் என்பதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கடந்த கோடைக்காலத்தில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, நடைபாதைகளில் சட்டவிரோதமாக ஓட்டுதல் மற்றும் விதிமீறல்களுக்காக 324 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, இ-ஸ்கூட்டர் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக டொராண்டோ சிறுவர் மருத்துவமனையின் மருத்துவர் டேனியல் ரோசன்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் வயதிற்கு முன்னரே, சாலை விதிகளோ அல்லது இந்த சாதனங்களின் வேகத்திறனோ புரியாமல் 10 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களே அதிகளவில் கடுமையான காயங்களுக்கு உள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.