திடிரென நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணி: பீதியடைந்த பயணிகள்!
நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணியொருவர் தென்கொரிய பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டங்களை மீறியதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குறித்த பயணியை பொலிஸார் காவலில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏசியானா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ321-200 என்ற உள்நாட்டு விமானம் ஏறக்குறைய 200 பேருடன் தலைநகர் சியோலில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதன்போது 240 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டேகு சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்க தயாராகிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விமானம் தரையிலிருந்து சுமார் 200 மீ உயரத்தில் இருந்தபோது, அவசரகால வெளியேற்றத்தின் அருகே அமர்ந்திருந்த பயணியொருவர் “நெம்புகோலைத் தொட்டு கைமுறையாக கதவைத் திறந்தார் என தென்கொரிய பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானம் தரையிறங்கும் வரை சுமார் 10 நிமிடங்களுக்கு குறித்த கதவு திறந்திருந்ததாகவும், இதனால் பயணிகள் சிலர் பீதியடைந்ததாகவும், அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.