கனடாவில் எபோலா சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ! மருத்துவமனையின் அறிவிப்பு
கனடிய மருத்துவமனையொன்றில் எபோலா தொற்று தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு தொற்று கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் பல்கலைக்கழக மருத்துவமனை மையத்தில் எபோலா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பரிசோதிக்கப்பட்ட நோயாளிக்கு அத்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நோயாளி ஒருவர் எபோலா தொற்று சந்தேகத்தில் பரிசோதிக்கப்பட்டு வருவதாக மாலை 4:30 மணியளவில் மருத்துவமனை மின்னஞ்சல் மூலம் அறிவித்திருந்தது.

எனினும், இரவு 8 மணியளவில் அந்த நோயாளி எபோலா சந்தேக நபராகக் கருதப்படமாட்டார் என மருத்துவமனை முறைப்படி உறுதிப்படுத்தியது.
எபோலா தொடர்பில் அந்த நோயாளிக்கு அளிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எபோலா தொடர்பான சிறப்பு பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படாது" என மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நோயாளியின் ரகசியத்தன்மையைப் பேணும் பொருட்டு, இது குறித்து மேலதிக விவரங்களை வெளியிட முடியாது என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட போது, வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. குறிப்பாக, அந்த நோயாளியை ஆம்புலன்ஸிலிருந்து அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறைக்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக, பிற ஆம்புலன்ஸ்கள் தற்காலிகமாக வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உகாண்டா, தெற்கு சூடான் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், அந்நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கனடா அரசு கடந்த மே மாதம் பயணத் தடை விதித்திருந்தது.
செப்டம்பர் மாதம் புதுப்பிக்கப்பட்ட இத்தடை செப்டம்பர் 28 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது நவம்பர் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.