ரஃபாவிலிருந்து தப்பியோடும் நோயாளிகள், மருத்துவர்கள்; 200 பேரின் உயிருக்கு ஆபத்து
காசா- ரஃபா அபுயூசுவ்அல் நஜார் மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களும் நோயாளிகளும் தப்பியோடுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நோயாளிகளை ரஃபா எல்லை ஊடாக எகிப்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மோதல் பகுதி என இஸ்ரேல் அறிவித்துள்ள காசாவின் தென்பகுதியில் அபுயூசுவ்அல் நஜார் மருத்துவமனை காணப்படுகின்றது.
இந்த மருத்துவமனை முற்றாக இயங்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
இஸ்ரேல் இந்த மருத்துவமனையை மோதல் களத்தின் மையத்திற்குள் சிக்கவைத்துள்ளதால் அந்த மருத்துவமனை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் காரணமாக நோயாளிகளும் மருத்துவர்களும் வெளியேறுகின்றனர் என வைத்தியர் மர்வான் அல் ஹம்ஸ் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அங்கு சிறுநீரக நோயாளிகளிற்கான பகுதி மாத்திரமே செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனை மூடப்பட்டால் சிறுநீரக நோயாளிகள் 200 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் மார்க்கிரட் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறுநீரகம் செயல் இழந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மருத்துவமனையே உயிருடன் வைத்திருக்கின்றதாக தெரிவித்த அவர், இந்த மருத்துவமனை செயல் இழந்தால் அவர்கள் உயிரிழக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.