வெளிநாடொன்றில் சிக்கிய கனடிய தம்பதி:15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய அபாயத்தில்
கனடிய தம்பதியனின் ஒரு சாதாரண விடுமுறைப் பயணம் எவ்வாறு வாழ்நாள் முழுவதுமான பயங்கரக் கனவாக மாறக்கூடும் என்பது பற்றிய அதிர்ச்சி மிக்க தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
டொராண்டோவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மற்றும் ஆட்ரியானா ஜோனி தம்பதியினர், தாங்கள் முதல் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அல்பேனியாவில் உள்ள உறவினர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக, டொராண்டோவில் இருந்து அல்பேனியாவின் திரானா நகருக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டனர்.
திரானா விமான நிலையத்தில் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே, அவர்களின் நான்கு பைகளில் ஒன்றில் 'பேக்கேஜ் டேக்' இல்லை என்று அல்பேனியா சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதைத் தொடர்ந்து கிறிஸ்டியன் அங்குள்ள பொதிகள் சுழலும் பெல்ட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தனியாகச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு பையை எடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
அந்தப் பை தன்னுடையது அல்ல என்று கிறிஸ்டியன் கூறியபோதிலும் அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தவில்லை. அப்பையைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் 23.15 கிலோகிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் பயணிகளின் பயணப் பொதிகள் மீதுள்ள அடையாள அட்டைகள் மாற்றி ஒட்டப்படும் மோசடிகள் நடப்பதாகக் கனடா அரசு எச்சரித்திருந்தது.
இதனால், பயணிகள் தங்களின் பைகளையும் அவற்றுடன் இணைக்கப்பட்ட பேக்கேஜ் டேக்குகளையும் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்து வைத்துக்கொள்ளுமாறு கனடா அரசு இணையதளம் மூலம் அறிவுறுத்தியிருந்தது. கிறிஸ்டியனும் கனடா அரசின் வழிகாட்டுதலின்படி, தனது பைகளின் டேக்குகளைப் புகைப்படங்கள் எடுத்து வைத்திருந்தார்.
ஆனால், அல்பேனியா காவல்துறையினர் அந்தப் புகைப்படங்களை ஆதாரமாக ஏற்பதற்குப் பதிலாக, "நீங்கள் ஏன் பைகளைப் புகைப்படம் எடுத்தீர்கள்?" என்று கிறிஸ்டியன் மீதே மிகுந்த சந்தேகம் கொண்டனர்.
கிறிஸ்டியன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, ஜன்னல்கள் இல்லாத, இருண்ட 8x9 அடி சிறிய தனிமைச் சிறை அறையில் 4 நாட்கள் அடைக்கப்பட்டார்.
அதே நேரத்தில், கர்ப்பிணியாக இருந்த ஆட்ரியானா கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யாமல் அல்ட்ராசவுண்ட் மட்டும் செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இல்லை என அல்பேனியா காவல்துறையிடம் தவறாகத் தெரிவித்தனர்.
இதனால், "மனைவி கர்ப்பமாக இருப்பதாகக் கூறி சோதனையில் இருந்து தப்பிக்க முயற்சித்தார்" என்று கிறிஸ்டியன் மீது அல்பேனியா ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பின்னர் 12 மணிநேரம் கழித்து மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு செய்யப்பட்ட ரத்தப் பரிசோதனையில் ஆட்ரியானா கர்ப்பமாக இருந்தது உறுதியானது.
எனினும், இந்த மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சி காரணமாக ஆட்ரியானாவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டது. டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் நடைபெறும் இந்த டேக் மாற்றும் மோசடிகள் குறித்து கனடிய பொலிஸார் வழங்கிய கடிதத்தையும் ஆதாரமாக வைத்து கிறிஸ்டியன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கனடியக் காவல் துறை கிறிஸ்டியன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், அவர் இந்த மோசடியின் பாதிக்கப்பட்ட நபர் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், அல்பேனியக் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கிறிஸ்டியன், 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கவுள்ள நீதிமன்ற விசாரணையைச் சந்திக்கவுள்ளார். இதில் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடிய அபாயம் நிலவுகிறது.