ஒட்டாவாவில் வாகனம் மோதி 78 வயது மூதாட்டி பலி
ஒட்டாவாவின் சாண்டி ஹில் பகுதியில் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த 78 வயது மூதாட்டி ஒருவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் ஃப்ரீல் வீதியில் நடந்த இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து அவசரக்கால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஒட்டாவா முதலுதவிப் படைப் பேச்சாளர் மார்க்-அன்டோயின் டெஷாம்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், வெள்ளிக்கிழமை இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஒட்டாவா காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய சாரதி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தைக் நேரில் பார்த்தவர்கள், டேஷ்கேம் (dashcam) அல்லது வீடியோ காட்சிகள் வைத்துள்ளவர்கள் உடனடியாகக் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒட்டாவா நகரில் இந்த வாரத்தில் பாதசாரி ஒருவர் விபத்தில் உயிரிழப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த புதன்கிழமை, பார்ஹேவன் பகுதியில் வாகனம் மோதி 60 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இதன் மூலம் ஒட்டாவா வீதிகளில் நடப்பு ஆண்டில் போக்குவரத்து விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.