எட்மண்டனில் வாகனம் மோதியதில் 78 வயது மூதாட்டி உயிரிழப்பு
கனடாவின் எட்மண்டன் நகரின் மத்திய பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட வாகன விபத்தில், 78 வயதுடைய ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
காலை சுமார் 10.15 மணியளவில் 107 அவென்யூ மற்றும் 115 ஸ்ட்ரீட் சந்திப்புப் பகுதியில் விபத்து நடந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட இடத்தில் சாலையை கடக்க முயன்றபோது, 2023 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஜீ.எம்.சீ ஸவானா ரக வாகனம் அந்த பெண்ணை மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.
வாகனத்தை ஓட்டிய 76 வயதுடைய ஆணுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வேகம் அல்லது மதுபானம் விபத்திற்குக் காரணமாக இருந்ததாக தற்போது நம்பப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது இந்த ஆண்டில் எட்மண்டன் நகரில் பதிவான முதல் உயிரிழப்பு விபத்து என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.