முன்னாள் மேஜரின் மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்பும் பெண்டகன் !
2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட் ஹூட் (Fort Hood) இராணுவத் தளத்தில் 13 இராணுவ வீரர்களைச் சுட்டுக்கொன்ற முன்னாள் அமெரிக்க இராணுவ மேஜரும் மனநல மருத்துவருமான நிடால் ஹாசனுக்கு (Nidal Hasan) வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைப் பொதுமக்கள் பார்க்கும் வகையில் நேரலையில் (Livestream) ஒளிபரப்ப அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சு (Pentagon) தீர்மானித்துள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) அளித்த பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். இந்தத் தண்டனை எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி டெக்சாஸில் உள்ள போர்ட் ஹூட் இராணுவத் தளத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

சட்ட வல்லுநர்களும் பேராசிரியர்களும் விமர்சனம்
அமெரிக்க இராணுவத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு மரண தண்டனையும் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது நிடால் ஹாசனுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பிறகு (1945) அமெரிக்க இராணுவத்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள முதல் சம்பவமாகவும் இது பதிவாகவுள்ளது.
இத்தகைய கடுமையான குற்றங்களுக்குத் தக்க பலன் உண்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்பும் இந்த முடிவு அமெரிக்க வரலாற்றில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத ஒன்று என்றும், இது மனித சமூகத்தைப் பழைய இடைக்காலத்திற்கு (Middle Ages) பின்னோக்கிக் கொண்டு செல்வதாகவும் சட்ட வல்லுநர்களும் பேராசிரியர்களும் விமர்சித்துள்ளனர்.
அத்துடன், குற்றவாளி நிடால் ஹாசன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் (Federal Court) மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால், இந்த வழக்கு பல ஆண்டுகள் நீடிக்கக்கூடும் என்றும், திட்டமிட்டபடி டிசம்பர் 3ஆம் திகதி தண்டனை நிறைவேறுவது சந்தேகம் என்றும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.