கனடாவில் பனியில் உறைந்து உயிரிழந்த இந்திய வம்சாவழியினர்; தகனம் செய்வது தொடர்பிலான முக்கிய தகவல்கள்
கனடாவில் பனியில் உறைந்து உயிரிழந்த இந்திய வம்சாவழியினரின் சடலங்கள் தகனம் செய்வது தொடர்பிலான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 19ஆம் திகதி , கனடா அமெரிக்க எல்லையில் நான்கு உயிரற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் உயிரிழந்தவர்கள் இந்தியாவிலுள்ள குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. உயிரிழந்தவர்கள், குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜகதீஷ் படேல் (35), அவரது மனைவி வைஷாலி (33) பிள்ளைகள் விஹாங்கி (12) மற்றும் தார்மிக் (3) ஆகியோர் ஆவர்.
அமெரிக்காவுக்குச் செல்லும் கனவில் இருந்த அவர்கள் அதற்காக சட்டவிரோதமான முறையை கையாண்ட போது உயிரிழந்தது தெரியவந்தது. தற்போது நால்வரின் உடல்களும் வின்னிபெக்கில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
அவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டாம் என குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து வின்னிபெக்கிலேயே அவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் இவ்விடயத்தில் எந்தவொரு இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. இதனிடையில், வின்னிபெக்கில் ஜகதீஷ் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் இது தொடர்பான இறுதி முடிவை இந்திய உயர் ஸ்தானிகராலயம் எடுக்கும் என தெரியவந்துள்ளது.
அதேசமயம் gofundme இணையதள பக்கம் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்காக $70,000 நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.