வடக்கு டகோட்டா மாகாணத்தில் பாலின மாற்று சிகிச்சைக்கு நிரந்தர தடை; நீதிபதி அதிரடி
அமெரிக்கா வடக்கு டகோட்டா மாகாணத்தில், சிறுவர்-சிறுமிகளுக்கு வழங்கப்படும் பாலின மாற்று சிகிச்சைக்கு (Gender-Affirming Care) விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிபதி அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பாலின மாற்று சிகிச்சையைத் தடை செய்யும் மாகாண சட்டத்தை எதிர்த்து, பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடுத்த வழக்கில், நீதிபதி அந்தத் தடையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகளின் சிகிச்சைக்கு பெரும் பின்னடைவு
இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம், ஹார்மோன் சிகிச்சை (Hormone Therapy) மற்றும் பருவமடைவதைத் தாமதப்படுத்தும் மருந்துகள் (Puberty Blockers) உள்ளிட்ட பாலின மாற்று மருத்துவ சிகிச்சைகளை குழந்தைகளுக்கு வழங்குவது குற்றமாகும் என்ற மாகாண சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும்.
இந்தத் தடை உத்தரவால், பாலின அடையாளக் குழப்பத்தால் (Gender Dysphoria) பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது சட்டத்திற்கு முரணானது, குடும்பங்களின் தனிப்பட்ட முடிவுகளில் அரசு தலையிடுகிறது என வாதிட்ட மனுதாரர்களுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனினும், சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளுக்கு, அத்தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,
அதேவேளை அமெரிக்காவில் பல மாகாணங்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பாலின மாற்று சிகிச்சை தடை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தத் தீர்ப்பு பெரும் சட்டப் போராட்டத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.