பிலிப்பின்ஸ் நிலநடுக்கம் ; அதிகரித்த பலி எண்ணிக்கை ; பல்லாயிரம் பேர் இடப்பெயர்வு
பிலிப்பின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 37 பேர் பலியாகி, 20,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
பிலிப்பின்ஸின் மிண்டானோ தீவுக்கு அருகே 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு உருவான நிலநடுக்கம், ரிக்டரில் 7.8 என்ற அளவில் பதிவானது. நிலநடுக்கத்தால் இதுவரை 37 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

20,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அவசரகால தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் பலரும் சுனாமி தாக்கக்கூடும் என்ற பயத்திலேயே வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அங்குள்ள கடல்பகுதியில் சுனாமி அலைகள் 1.4 மீட்டர் அளவில் எழும்பியதால் கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய அண்டை நாடுகளின் கடலோரப் பகுதிகளிலும் சிறிய அளவிலான சுனாமி அலைகள் பதிவாகின.
பல மாகாணங்களில் கிட்டத்தட்ட 2,000 வீடுகளும், 117 அரசு கட்டிடங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும் இடிந்து தரைமட்டமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனரல் சாண்டோஸ் பகுதி விமான நிலையம் மூடப்பட்டு, மனிதாபிமான உதவிகளுக்கான விமானங்கள் மட்டுமே செயல்படுவதாகவும், உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிலிப்பின்ஸில் 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவான சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது.