பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக்கொண்ட நபர் உயிரிழப்பு
அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்.
ரிக் ஸ்லேமேன் என்ற 62 வயதுடையவரே உலகில் முதன்முதலாக பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
4 மணி நேரம் அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை
பாஸ்டன் நகரிலுள்ள மாசசூசெட்ஸ் பொது வைத்தியசாலையில் சுமார் 4 மணி நேரம் அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் பொருத்தியிருந்த நிலையில் மருத்துவத்துறையில் இது முக்கிய மைல்கல் சாதனையாக பார்க்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் பன்றியின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலமாக அவருக்கு பொருத்தப்பட்டது. இந்நிலையில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இரண்டு மாத காலத்துக்குள் அவர் உயிரிழந்தார்.
அதேவேளை உறுப்பு மாற்று சிகிச்சையின் விளைவுதான் அவரது மரணத்துக்கு காரணம் என சொல்வதற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018இல் அதே வைத்தியசாலையில் அவருக்கு சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோதும் 5 ஆண்டுகளில் அது செயலிழந்துள்ளது. அதன் காரணமாக அவருக்கு உடல் ரீதியான பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
தொடர்ந்து டயலஸிஸ் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நிலையில் தற்போது அவ்ர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கடந்த 2022இல் அமெரிக்காவின் மேரிலேண்ட் வைத்தியசாலையில் பன்றியின் இதயம் நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அவரும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இரண்டு மாத காலத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.