கனடாவின் பல மாகாணங்களில் பிஸ்தா பொருட்கள் திரும்பப் பெறல் அறிவிப்பு
கனடாவின் ஒன்ராரியோ, க்யூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் விற்கப்பட்ட பிஸ்தா (Pistachio) மற்றும் அதனுடன் தொடர்புடைய உணவுப் பொருட்கள் பலவும் சால்மொனெல்லா (Salmonella) என்ற ஆபத்தான உணவுக் கிருமி தொற்றின் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை, நாடு தழுவிய ரீதியில் நடைபெற்று வரும் சால்மொனெல்லா தொற்று விசாரணையுடன் தொடர்புடையதாக கனடா கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது.
அரசு பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும், இந்தப் பொருட்களை உண்ணவோ, விற்கவோ, பரிமாறவோ, விநியோகிக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒன்ராரியோ மாகாணம் கொலிங்வுட் நகரில் ஆன்லைனில் விற்கப்பட்ட பிஸ்தா பாக்லாவா மற்றும் பிஸ்தா சீஸ்கேக், டொராண்டோவில் விற்கப்பட்ட பெரரல் பிராண்டின் ஹல்வா பிஸ்தான டெசர்ட், சில பொருட்களில் இவ்வாறு சல்மொனெல்லா தொற்று தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவை ஒன்ராரியோ மற்றும் க்யூபெக் மாகாணங்களில் விற்கப்பட்டன. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், பிராண்டு பெயர் குறிப்பிடப்படாத பல அளவுகளில் பிஸ்தாக்கள் திரும்பப் பெறப்பட்டன.
மூன்லைட் க்ரோசர் நிறுவனம் விற்ற பிஸ்தா பொருட்களும் தொற்று அபாயத்திற்காக திரும்பப் பெறப்பட்டுள்ளன.
திரும்பப் பெறப்பட்ட பொருட்களை உண்ட பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.