தெற்கு சூடானில் விமான விபத்து ; விமானி உட்பட 14 பேர் பலி
தெற்கு சூடானின் தலைநகரான ஜூபா (Juba) அருகே நிகழ்ந்த கோர விமான விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 13 பயணிகள் மற்றும் விமானி என அனைவரும் உயிரிழந்தனர்.
செஸ்னா 208 கேரவன் (Cessna 208 Caravan) ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், சிட்டி லிங்க் ஏவியேஷன் (CityLink Aviation) நிறுவனத்தால் இயக்கப்பட்டது.
'யே' (Yei) நகரிலிருந்து ஜூபா சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அது இழந்தது.

பலியானவர்களில் இருவர் கென்ய நாட்டைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் தெற்கு சூடானைச் சேர்ந்தவர்கள். ஜூபா நகருக்கு வெளியே சுமார் 20 கி.மீ தொலைவில் விமானம் விழுந்து நொறுங்கியது.
விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பாகங்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மோசமான வானிலை மற்றும் குறைவான பார்வைத் திறன் (Low visibility) காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து மேலதிக தகவல்களைச் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.