அமெரிக்காவில் விமானம் மோதி வீடொன்று தீக்கிரை
அமெரிக்கா மினசோட்டா புரூக்ளின் பார்க் நகரப் பகுதியில் சனிக்கிழமை (29) சிறிய ரக விமானம் மோதி வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
மினியாபோலிஸுக்கு வடக்கே 11 மைல் தொலைவில் உள்ள சுமார் 82,000 பேர் வசிக்கும் நகரமான புரூக்ளின் பார்க் நகரப் பகுதியில் பிற்பகல் 12:20 மணிக்கு விபத்துக்குள்ளானதாக எஃப்.ஏ.ஏ தெரிவித்துள்ளது.
விமானத்தில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை
விமானம் மோதி வீடு தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளதோடு, அருகிலுள்ள வீடுகளுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் வீட்டிலிருந்து ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை என நகர தகவல் தொடர்பு முகாமையாளர் ரிசிகாட் அடேசாகன் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் இருந்த ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை, இருப்பினும் எத்தனை பேர் அதில் இருந்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என நகர தீயணைப்புத் திணைக்களத்தின் தலைவர் ஷான் கான்வே தெரிவித்துள்ளார்.
SOCATA TBM7 என அடையாளம் கண்டுள்ள இந்த விமானத்தில் அதிகபட்சமாக ஏழு பேர் பயணிக்க முடியும் என GlobalAir.com தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து விசாரணை செய்ய எஃப்.ஏ.ஏ. மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணைக்குழு புரூக்ளின் பார்க் நகரப் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளது.
அயோவாவில் உள்ள டெஸ் மொய்ன்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் மினசோட்டாவில் உள்ள அனோகா கவுண்டி-பிளெய்ன் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளது.