நினைவேந்தல் தின நிகழ்வின் போது சிறிய ரக விமானம் விபத்து: விமானி பலி
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற நினைவேந்தல் தின நிகழ்வில் பங்கேற்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் விமானி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த விமானி 68 வயதான டேனியல் பேரன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கியூபெக் நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தெற்கே உள்ள பியூஸ் பிராந்தியத்தின் செயின்ட்-ஜோர்ஜஸ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த இடத்திலேயே விமானி உயிரிழந்துவிட்டதாக கியூபெக் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

"இந்த விபத்தில் குற்றவியல் பின்னணி எதுவும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக பாரிய குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து பாதுகாப்புச் சபையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது" என மாகாண பொலிஸ் பேச்சாளர் ஆட்ரி-அன்னே பிலோடோ தெரிவித்துள்ளார்.
செயின்ட்-ஜோர்ஜஸ் பகுதியைச் சேர்ந்த குறித்த விமானி, விபத்து நிகழ்ந்த போது விமானத்தில் தனியாகவே இருந்துள்ளார்.
நகரின் நினைவேந்தல் தின நிகழ்வில் வான்வழி மரியாதை செலுத்துவதற்காக ஆறு விமானங்கள் ஒன்றாகப் பறந்து கொண்டிருந்த போது, அவற்றில் ஒன்றான இந்த விமானம் தரையிறங்குவதற்கான இறுதிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே விபத்துக்குள்ளானதாக செயின்ட்-ஜோர்ஜஸ் நகர முதல்வர் மனோன் பூகி தெரிவித்துள்ளார்.
நினைவேந்தல் தினத்தன்று நிகழ்ந்த இச்சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏனைய விமானங்களுடன் பறந்து கொண்டிருந்த குறித்த விமானம் திடீரெனப் பிரிந்து, ஏனையவற்றை விடத் தாழ்வாகப் பறந்து மரங்களுக்குப் பின்னால் மறைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கரும்புகை எழுந்ததைத் தாம் அவதானித்ததாகவும் நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார். விமானம் தலைகீழாகக் கீழே விழுந்ததைத் தாம் கண்டதாக மற்றுமொரு சாட்சி குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கியூபெக் மாகாண முதல்வர் போல் செயின்ட்-பியர் பிளாமொண்டன் மற்றும் கியூபெக் லிபரல் கட்சித் தலைவர் சார்லஸ் மில்லார்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.