நடுவானில் நிலைகுலைந்த விமானம் ; அச்சத்தில் அலறிய பயணிகள்
இஸ்தான்புல்லில் இருந்து துனிசியா நோக்கி பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், கடந்த 10 ஆம் திகதி மோசமான வானிலையால் நடுவானில் திடீரெனக் கீழே இறங்கியதில் பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.
துனிஸ்-கார்த்தேஜ் சர்வதேச வானூர்தி நிலையத்தை அடையும் போது TK 661 என்ற இந்த விமானம் கடுமையான சூறாவளி மற்றும் சீரற்ற வானிலையை எதிர்கொண்டது.

விமானத்தை தரையிறக்க விமானி 3 முறை முயன்ற போதிலும், பலத்த காற்றினாலும் புயலினாலும் விமானம் கடுமையாகக் குலுங்கி, திடீரெனக் கீழே சரியத் தொடங்கியது.
இதன்போது, விமானத்தில் இருந்த பயணிகள் "நாங்கள் இறக்கப் போகிறோம்" என்று அச்சத்தில் அலறியுள்ளனர்.
இது தொடர்பான காட்சிகளை மேரினா மைஸ்காயா என்ற பெண் பயணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியாகப் பகிர்ந்துள்ளார்.
பயணிகளின் கடும் பீதி மற்றும் கோரிக்கையைத் தொடர்ந்து, விமானம் துனிஸ் நகருக்கு தெற்கே 60 மைல் தொலைவில் உள்ள என்பிதா-ஹம்மாமெட் சர்வதேச விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.