நேபாளத்தில் ஓடுதளத்தை விட்டு விலகி பாய்ந்த விமானம் ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
நேபாளத்தின் பத்ராப்பூர் (Bhadrapur) விமான நிலையத்தில் இன்று தரையிறங்கிய புத்தா ஏர் (Buddha Air) நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, ஓடுதளத்தை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானத்தில் 51 பயணிகளும் நான்கு பணியாளர்களும் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான கண்காணிப்புத் தரவுகளின்படி , இந்த விபத்துக்குள்ளான விமானம் 9N-AMF இலக்கத்தைக் கொண்ட ATR 72-500 ரக டர்போபிராப் பயணிகள் விமானமாகும்.
விமானம் ஓடுதளத்தை விட்டு சுமார் 200 மீற்றர் தூரம் தாண்டிச் சென்று, அருகிலிருந்த ஒரு சிறிய ஓடைக்கு அருகில் நின்றது.
இந்தச் சம்பவத்தின் போது விமானத்திற்கு சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து ஆராயவும், முதலுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் காத்மண்டுவிலிருந்து தொழில்நுட்பக் குழுக்களும் மீட்புக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.