பிரிட்டன் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தச் சதி ; அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
பிரிட்டன் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தச் சதி செய்ததாக மூவர் மீது அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் ஃபேர்ஃபோர்ட் விமானப்படைத் தளத்திற்கு அருகில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இடம்பெற்ற பாதுகாப்புச் சம்பவம் இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல்
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள யூத சமூகங்கள் மீதும், பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) கட்டுப்பாட்டிலுள்ள ஃபேர்ஃபோர்ட் விமானப்படைத் தளம் மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் மூவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் சார்பில் சுமார் 20 தாக்குதல்களை முன்னெடுக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இந்தச் சதித்திட்டம், சர்வதேசப் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையைக் கொண்ட ஒருவர், ஓர் ஈரானியர் மற்றும் ஓர் ஈராக்கியர் ஆகிய மூவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவர்களில் இரட்டைக் குடியுரிமை பெற்ற நபர் மட்டுமே தற்போது அமெரிக்கக் காவலில் உள்ளார்.
ஈரானுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளின் சார்பில் தாக்குதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இவர்கள் உதவியதாக அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சிறையில் இருந்த இரட்டைக் குடியுரிமை பெற்ற நபர், தாக்குதல்களை முன்னெடுக்கக்கூடிய நபர்களுக்கு நிதி வழங்குவதற்காகத் தனது உறவினர்களுடன் குறியீட்டுச் செய்திகள் மூலம் தொடர்புகொண்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஃபேர்ஃபோர்ட் சம்பவத்திற்கு முந்தைய நாட்களிலும் அவர் ஏனைய சந்தேக நபர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது
.செய்திகளைப் படி இந்தச் சதித்திட்டம் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) மற்றும் ஈராக்கைத் தளமாகக் கொண்ட கட்டாயிப் ஹிஸ்புல்லா ஆயுத அமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய வலையமைப்பின் சார்பில் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளது.