கனடிய பிரதமர் அவசரமாக எகிப்திற்கு விஜயம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான சமாதான ஒப்பந்தத்தை முன்னெடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்பாடு செய்த அவசர உச்சிமாநாட்டில் பங்கேற்க கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் எகிப்து நோக்கி புறப்பட்டார்.
இந்த உச்சிமாநாடு எகிப்தின் சிவப்பு கடல் நகரமான ஷார்ம்எல்-ஷேக் (Sharm el-Sheikh) இல் நடைபெறுகிறது.
எகிப்து அதிபர் அப்தெல்-பத்தாஹ் எல்-சீசி, இதை “சமாதான உச்சிமாநாடு” என அறிவித்து இணைத் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.
மத்திய கிழக்கு நாடுகளுடன் சேர்த்து பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றின் தலைவர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.
மொத்தம் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அரசுத் தலைவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்க் கார்னியின் இந்தப் பயணம் ஊடகங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை.
தற்போது மூன்றாவது நாளாக நீடிக்கும் இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான தற்காலிக சமாதான உடன்பாட்டின் போது, காசா பகுதியில் உணவு மற்றும் மருந்து போன்ற மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியில் சர்வதேச அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
டிரம்ப் ஏற்பாடு செய்துள்ள இந்த சமாதானம் குறுகிய காலத்துக்கான அமைதிக்கானதா அல்லது நீண்டகால ஒப்பந்தத்திற்கான பாதையைத் திறக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.