தாய்வானுடனான வர்த்தக உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும்: கார்னி
கடந்த ஓராண்டுக்கு முன்னரே இறுதி செய்யப்பட்ட தாய்வானுடனான வர்த்தக ஒத்துழைப்பு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் எனத் தாம் நம்புவதாகக் கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அது விரைவில் கைச்சாத்திடப்படும் என நாம் நம்புகிறோம் என பிரதமர் கார்னி குறிப்பிட்டார்.
சீனாவின் ஷென்சென் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க ஆவணங்களின்படி, ஒட்டாவாவும் தாய்ப்பேயும் கடந்த 2025 மார்ச் மாதமே வர்த்தக ஒத்துழைப்பு கட்டமைப்பு உடன்படிக்கையை இறுதி செய்திருந்தன.
அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களின் பின்னர் இது குறித்து மாகாண அரசாங்கங்களுடனும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கை பிரெஞ்சு மற்றும் சீன மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கைச்சாத்திடுவதற்கான பரிசீலனையில் உள்ளதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கும் மேலாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படாமல் இருப்பதற்கான காரணம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பிரதமர் கார்னி நேரடியான பதிலை அளிக்காமல், அது விரைவில் கைச்சாத்திடப்படும் எனத் தாம் நம்புவதாக மட்டுமே குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பிரதமரின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்வானுடன் கனடா வலுவான உறவுகளைக் கொண்டுள்ள போதிலும், பெய்ஜிங் அரசாங்கத்தையே சீனாவின் ஒரே சட்டபூர்வமான அரசாங்கமாக அங்கீகரிக்கும் கனடாவின் நீண்டகால 'ஒரே சீனா' கொள்கையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.