இடைத் தேர்தல் தோல்வி குறித்து கனடிய பிரதமரின் கருத்து
வாக்காளர்களின் கரிசனையை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளதாக கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவில் டொரன்டோ சென் போல்ஸ் தேர்தல் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி தோல்வியை தழுவியது.
கான்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் இந்த தேர்தலில் 580 மேலதிக வாக்குகளினால் வெற்றி ஈட்டினார்.
இந்த தேர்தல் தோல்வி ஆளும் லிபரல் கட்சிக்கும் பிரதமர் ஜஸ்டின் டுடே விற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் கட்சி அடைந்த தோல்வி குறித்து பிரதமர் மனம் திறந்து உள்ளார். வாக்காளர்களின் கரிசனைகளையும் அவர்கள் அதிருப்தியையும் புரிந்து கொள்வதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இது ஒரு கடினமான தருணம் எனவும் ஒட்டுமொத்த லிபரல் கட்சி உறுப்பினர்களும் கடுமையாக உழைக்க வேண்டிய தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடியர்கள் தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய மெய்யான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மக்களின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு எனினும் இந்த தேர்தல் தோல்வி காரணமாக பிரதமர் பதவி விலகுவார் என சில ஊகங்கள் வெளியிடப்பட்ட போதிலும் அவ்வாறான எந்த ஒரு முனைப்பு பற்றி பிரதமர் கருத்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தோல்வி குறித்து அதிருப்தி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.