கனடாவில் எரிபொருள் வரியை தற்காலிகமாக ரத்து செய்ய கோரிக்கை
இந்த ஆண்டின் மீதமுள்ள காலத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் வரிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கனடிய மத்திய அரசை, எதிர்க்கட்சித் தலைவரான பியர் பொய்லிவ்ரே வலியுறுத்தியுள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி (GST) மற்றும் கலால் வரி (Excise tax) ஆகியவற்றை நீக்குவதன் மூலம் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு சுமார் 25 சதங்கள் வரை சேமிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், தேவையற்ற அரசுச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் இந்த வரிச்சலுகைக்குத் தேவையான 5.25 பில்லியன் டொலர் நிதியைத் திரட்ட முடியும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.
கனடாவில் எரிபொருள் விலை அமெரிக்காவை விட சுமார் 28 சதங்கள் அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய பொய்லிவ்ரே, இந்த உயர்வுக்கு உலகளாவிய காரணிகள் மட்டுமன்றி, லிபரல் அரசின் வரிகளுமே முக்கியக் காரணம் என குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களின் உழைப்பில் கிடைத்த ஒவ்வொரு பைசாவும் அவர்களின் பாக்கெட்டிலேயே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் எரிபொருள் விலையேற்றத்தைக் குறைக்க வரிகளைக் குறைத்துள்ளதை அவர் உதாரணமாகக் காட்டினார்.