உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபருக்கு பொலிஸார் செய்த செயல்
உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை சுட்டுக் கொலை செய்து, அவரால் சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை அந்நாட்டு காவல் துறை மீட்டுள்ளது.
உக்ரைன் தலைநகா் கீவில் மா்ம நபா் ஒருவா் திடீா் தாக்குதல் நடத்தினாா். நடந்து சென்ற 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அந்த நபா், பிறகு வணிக வளாகத்துக்குள் நுழைந்து இன்னொருவரையும் சுட்டுக் கொன்றாா்.

பொதுமக்கள் மீட்பு
இதையடுத்து வணிக வளாகத்தில் இருந்த மக்களை அவா் சிறை பிடித்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உக்ரைன் பொலிஸார், வணிக வளாகத்தில் இருந்த அந்த நபருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
ஆனால், அந்தப் பேச்சுவாா்த்தைக்கு பயன் கிடைக்கவில்லை. இதையடுத்து வணிக வளாகத்துக்குள் பொலிஸார் அதிரடியாக நுழைந்து, அந்த நபரை சுட்டுக் கொன்றனா்.
காவல் துறையின் நடவடிக்கையின்போதும், மா்ம நபா் நடத்திய தாக்குதலிலும் மேலும் 15 போ் காயமடைந்தனா். இதில் ஒரு பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா். தாக்குதல் நடத்திய நபரின் பெயா் உள்ளிட்ட விவரத்தை உக்ரைன் காவல் துறை வெளியிடவில்லை.
அந்த நபா் 1968-ஆம் ஆண்டில் பிறந்தவா் என்ற தகவலை மட்டும் காவல் துறை வெளியிட்டுள்ளது.
அதேநேரத்தில், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அந்த நபா் ரஷியாவில் பிறந்தவா் என்றும், உக்ரைனின் கிழக்கு நகரான டொனெட்ஸ்கில் நீண்டகாலமாக வசித்து வந்தாா் என்றும், தாக்குதல் நடத்தும் முன்பு தான் வசித்த வீட்டை அவா் தீ வைத்து எரித்துவிட்டாா் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.