கனடாவில் மின்னணு சாதன மோசடியில் ஈடுபட்டவர் கைது
சாதனங்கள் மீட்பு கனடாவில் மோசடியில் ஈடுபட்டு தொலைதொடர்பு நிறுவனங்களின் முகவர்கள் போல நடித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களைப் பறித்து வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவரை ஹால்டன் பிராந்திய காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து சுமார் 36,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள 22 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மில்டன் பகுதியைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட இந்த மோசடி கும்பல், கனடாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான Rogers, Bell, அல்லது Telus ஆகியவற்றின் பிரதிநிதிகள் போல வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், அவர்களுக்குப் புதிய ஐபோன் அல்லது மின்னணு சாதனங்கள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கப் போவதாகக் கூறி நம்ப வைத்துள்ளனர்.
வாடிக்கையாளர்களின் தற்போதைய கணக்கைப் (account) பயன்படுத்தி, புதிய போன் அல்லது சாதனங்களை வாங்குமாறு அவர்களை மூளைச்சலவை செய்து ஆர்டர் செய்ய வைக்கின்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு அந்தப் புதிய சாதனம் டெலிவரி செய்யப்பட்டவுடன், மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், "ஆர்டரில் தவறு நடந்துவிட்டது, எனவே அந்தப் பெட்டியைப் பிரிக்காமல் எங்களது அஞ்சல் பெட்டிக்கு (PO Box) திருப்பி அனுப்புங்கள்" என்று கூறுகின்றனர்.
அஞ்சல் பெட்டிக்கு வரும் அந்தப் புதிய சாதனங்களைச் சேகரிக்கும் மோசடி கும்பல், அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி சட்டவிரோதமாக விற்றுப் பெரும் லாபம் சம்பாதிக்கிறது. எனவே இந்த விடயம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.