சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் ; டிரம்பின் அடுத்த அதிரடி திட்டம்
அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கப்பல் கட்டும் தொழில்
பதிலுக்கு சீனா அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.
இந்த சூழலில், கப்பல் கட்டும் தொழிலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக அமெரிக்க கப்பல் கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதனை மாற்றி அமைக்க, சீன கப்பல்களை சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு துறைமுக கட்டணம் விதிக்க அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு டன் சரக்குக்கு 50 டாலர் (ரூ.4,270) என்ற விகிதத்தில் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து சீனா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது: இது தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை. இது உலகளாவிய கப்பல் செலவுகளை உயர்த்துவதோடு, உலகளாவிய தொழில்துறையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் பணவீக்க அழுத்தங்களை அதிகரிக்கிறது.
அமெரிக்க கப்பல் கட்டும் தொழிலை புத்துயிர் பெறச் செய்வதில் தோல்வி அடையும். பொருட்களின் விலை அதிகரித்து அமெரிக்க நுகர்வோர்தான் பாதிக்கப்படுவார்கள்.
அந்த நாட்டு கப்பல் கட்டும் தொழிலை மேம்படுத்தாது. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.