கனடிய அஞ்சல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
கனடாவின் தேசிய அஞ்சல் திணைக்களம், எடோபிகோக் பகுதியில் இன்னும் சில வாரங்களில் வீடு வீடாகச் சென்று தபால் விநியோகம் செய்யும் சேவையை நிறுத்தவுள்ளது.
எனினும், டொரண்டோ பெருநகர பகுதி முழுவதிலும் இந்த மாற்றத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த 5 ஆண்டுகள் வரை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
M9V மற்றும் M9W ஆகிய அஞ்சல் குறியீடுகளைக் கொண்ட வீடுகளுக்கு வரும் நவம்பர் 16 முதல் நேரடியாக வீடுகளுக்குத் தபால் வழங்கும் சேவை நிறுத்தப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இனி எடோபிகோக் வாசிகள் தங்களின் தபால்களைத் தங்களின் பகுதியில் அமைக்கப்பட்ட சமூக அஞ்சல் பெட்டிகளில் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.
நாடு முழுவதும் தற்போது நேரடியாக வீடுகளுக்குத் தபால் பெறும் 40 லட்சம் குடியிருப்பு வாசிகளைச் சமூக அஞ்சல் பெட்டி முறைக்கு மாற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமூக அஞ்சல் பெட்டிகளுக்குச் சென்று தபால்களைப் பெற முடியாத முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கனடா போஸ்ட் சிறப்பு வசதியை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.