மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; பீதியில் உறைந்த மக்கள்
மெக்சிகோவில் ரிக்டரில் 6.3 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின. இதனால், பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
தெற்கு மெக்சிகன் மாநிலமான குரேரோவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

வீதிகளில் தஞ்சம்
பசிபிக் கடற்கரை ரிசார்ட்டான அகபுல் கோவிற்கு அருகிலுள்ள தெற்கு மாநிலமான குரேரோவில் உள்ள சான் மார்கோஸ் நகருக்கு அருகில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என மெக்சிகோவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், உயரமான கட்டடங்கள் குலுங்கின. பீதியில் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
குறிப்பாக, மெக்சிகோ நகரம் மற்றும் அகாபுல்கோவில் வசிப்பவர்களும் சுற்றுலாப் பயணிகளும் தெருக்களுக்கு விரைந்தனர். இதுவரை பெரிய அளவிலான சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.