சேற்று வயலில் கவிழ்ந்த கார் ; திருமணத்திற்கு சென்ற கர்ப்பிணி மணமகளுக்கு நடந்த சம்பவம்
வடக்கு வியட்நாமில் திருமண ஊர்வலத்தின் போது கார் ஒன்று சேறு நிறைந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உள்ளூர் கிராம மக்களின் துரித செயலால் கர்ப்பமாக இருந்த மணமகள் மணமகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வடக்கு வியட்நாமின் துயென் குவாங் மாகாணத்தைச் சேர்ந்த 21 வயது மணமகன் லி வான் வியட் மற்றும் 19 வயது மணமகள் டாம் தி சுவான் ஆகியோருக்கு கடந்த 10-ம் திகதி திருமணம் நடைபெற்றது.

பரிசோதனை
அன்று காலை 10 மணியளவில் தோ கிராமத்திலிருந்து மணமகனின் ஊரான பான் பான் கிராமத்திற்கு திருமண கார் சென்று கொண்டிருந்தது.
மணமகன் வீட்டிற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கார் சென்றபோது, பலத்த காற்று மற்றும் மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த, கார் சாலையோரமிருந்த ஒரு மீட்டர் ஆழமுள்ள சேறு நிறைந்த நெல் வயலில் கவிழ்ந்து ஒரு பக்கமாக சாய்ந்தது.
முதலில் நான்கைந்து இளைஞர்கள் சேர்ந்து காரைத் தூக்க முயன்றும், அதிக எடை காரணமாக அவர்களால் முடியவில்லை. இதையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த ஏராளமான கிராமவாசிகள் ஒன்றிணைந்து காருக்குள் சிக்கியிருந்த மணமகனும் மணமகளும் பத்திரமாக வெளியே மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், மணமகளின் வெள்ளை நிறத் திருமண ஆடை, முகம் மற்றும் தலைமுடி முழுவதும் சேறு படிந்திருந்தது.
இதையடுத்து மணமகள் உடனடியாக மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, குளித்து வேறு ஆடை அணிந்த பிறகு திட்டமிட்டபடி திருமண சடங்குகள் இனிதே நடைபெற்றன.
மேலும், மணமகள் கர்ப்பமாக இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தாயும் வயிற்றிலிருந்த குழந்தையும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.