கனடாவின் நியூஃபௌன்ட்லாண்ட் ஆட்சியை பிடித்த கன்சர்வேட்டிவ் கட்சி
நியூஃபௌன்ட்லாண்ட் மற்றும் லப்ரடார் மாகாணத்தில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி (Progressive Conservatives) ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லிபரல் கட்சியை வாக்காளர்கள் பதவியிலிருந்து நீக்கி, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர்.
டோனி வேக்ஹம் (Tony Wakeham) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி இறுதி வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை பெற்றது. அதற்கு முன் லிபரல் கட்சி தலைவர் மற்றும் முதலமைச்சர் ஜான் ஹோகனுடன் (John Hogan) கடும் போட்டி நிலவியது.
வெற்றி உரையில் வேக்ஹம், லிபரல் கட்சியின் வெற்றியை கணித்த அரசியல் ஆய்வாளர்களை விமர்சித்தார்.
“நான் 30 ஆண்டுகளாக கூடைப்பந்தாட்ட பயிற்சியாளராக இருந்தேன். போட்டியின் நடுப்பகுதியில் உள்ள மதிப்பெண் முக்கியமில்லை என்பதை அப்போது கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பலர் ‘இந்த தேர்தல் முடிந்துவிட்டது’ என்று நினைத்தார்கள். ஆனால் இன்று அனைவரும் அறிந்திருக்கிறோம் — திரும்பிப் பெறும் வெற்றி என்றால் இதுதான்,” என்று அவர் கூறியுள்ளார்.
மூன்று மணி நேர வாக்கு எண்ணிக்கைக்குப் பின், 40 தொகுதிகளில் கன்சர்வேட்டிவ் கட்சி 21 இடங்களை வென்றது — முந்தைய தேர்தலிலிருந்து 7 இடங்கள் கூடுதலாக பெற்றுக்கொண்டுள்ளது. லிபரல் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று, 6 இடங்களை இழந்ததுள்ளது.
ஜிம் டின் (Jim Dinn) தலைமையிலான நியூ டெமோக்ரடிக் கட்சி (NDP) இரண்டு இடங்களைப் பெற்று தங்களது நிலையை இரட்டிப்பாக்கியது. இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மொத்த வாக்கு விகிதத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி 44.37% வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றது; லிபரல் கட்சிக்கு 43.43% வாக்குகள் கிடைத்தன. இதன்படி சிறிய வாக்கு வித்தியாசத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.