உக்ரைனை வெல்வது நிச்சயம் ; விளாதிமீர் புதினின் சூளுரை
உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி புதினின் உரையை விமர்சித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, எந்த விலை கொடுத்தும் அவர்கள் அமைதியை ஏற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஷ்ய மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை இரவு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: “நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன் போரில், ரஷ்யா தனது இலக்கை எட்டி வெற்றி பெறும். நமது நாயகர்கள் (ராணுவ வீரர்கள்) மீதும், நமது வெற்றியின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
கோடிக்கணக்கான ரஷிய மக்கள் புத்தாண்டு தருணத்தில் ரஷ்ய வீரர்களுக்காக பிரார்த்திக்கின்றனர். நாட்டு மக்கள் ராணுவத்தின் பின்னால் ஒற்றுமையாக நிற்கின்றனர்.” எனத் தெரிவித்தார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு ரஷிய அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின், புத்தாண்டு உரையின்போது தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, புதின் அதிபராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்று இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைகிறது.