கியூபெக் அரசாங்கம் மதங்களுக்கு மதிப்பதில்லை என குற்றச்சாட்டு
கியூபெக் அரசு மதச்சார்பின்மை சட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க முயல்வதாக, கனடிய முஸ்லிம்களின் தேசிய பேரவையின் தலைவர் ஸ்டீபன் பிரவுன் குற்றம் சாட்டியுள்ளார்.
குழந்தைகள் ஆன்மீகப் பற்றுடன் வாழ்வதற்கும் பள்ளிக்குச் செல்வதற்குமான உரிமைகளைக் குறிவைத்துத் தாக்குவது குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம், என நேர்காணல் ஒன்றில் ஸ்டீபன் பிரவுன் கவலை தெரிவித்துள்ளார்.
கியூபெக்கின் புதிய கல்வி அமைச்சர் ஜோயல் அர்செனோ , பள்ளி மாணவர்கள் மத அடையாளங்களை ஆடை மற்றும் அணிகலன்களாக அணிவதற்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை எனவும் புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பார்ட்டி கெபெக்குவா கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது இத்தகைய தடையைக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்திருந்தது.
மதச்சார்பின்மை என்பது மதத்தை தனிப்பட்ட முறையில் மட்டுமே பின்பற்றி வாழும் பெரும்பாலான கியூபெக் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது என அக்கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
எனினும், அனைத்து மக்களுக்குமான அரசாக இருக்கும் என்ற வாக்குறுதியை அரசாங்கம் மீறிவிட்டதாக பிரவுன் சாடியுள்ளார்.
ஹிஜாப், கிப்பா, சிலுவை மற்றும் தலைப்பாகை போன்ற மதச் சின்னங்களை குழந்தைகள் அணிவதைத் தடுப்பது சிறுபான்மையினருக்கு எதிரான வெளிப்படையான பாகுபாடு என்றும், இது சட்டமாக மாற்றப்பட்டால் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.