செயற்கை நுண்ணறிவினை தவறாக பயன்படுத்திய நபருக்கு நீதிமன்றம் தண்டனை
செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) தவறாகப் பயன்படுத்தி நீதிமன்றத்தில் தன்னைத் தானே பாதுகாத்த நபருக்கு கனடாவின் கியுபெக் மாகாண உயர்நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
குறித்த நபருக்கு 5,000 கனடிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீர்ப்பை நீதிபதி லூக் மோரின் (Luc Morin) வழங்கியுள்ளார்.
தன்னைப் பாதுகாப்பதற்காக செயற்கை நுண்ணறிவு
ஜீன் லாப்ரேட் (Jean Laprade) என்ற நபர் கினி (Guinea) நாட்டில் மேற்கொண்ட ஒரு வணிக ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் தொடர்புபட்டிருந்தார். 2021 இல் பாரிஸ் சர்வதேச நடுவர் மன்றம் (Paris International Arbitration Chamber) அவரை சுமார் 2.7 மில்லியன் டொலர் தொகையை செலுத்த உத்தரவிட்டது.
அந்த தீர்ப்பை ரத்து செய்யும்படி கியுபெக் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவர் தாக்கல் செய்த ஆவணங்களில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலியான மேற்கோள்கள், சட்ட தீர்ப்புகள் மற்றும் கற்பனை செய்யப்பட்ட தரவுகள் இடம்பெற்றிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
லாப்ரேட் தன் திறனுக்குள் சிறந்த முறையில் தன்னைப் பாதுகாப்பதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியிருந்தாலும், அவர் செய்த தவறு மிகவும் கண்டிக்கத்தக்கது,” என நீதிபதி மோரின் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அவர் மேலும், “செயற்கை நுண்ணறிவால் ‘உருவாக்கப்பட்ட’ மேற்கோள்களை நம்பி செயல்பட்டதால், அதன் விளைவுகளை அவர் ஒருவரேச் சந்திக்க வேண்டும்,” என்றும் கூறினார். லாப்ரேட் தனது வணிக ஒப்பந்தத்தில் மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானம் பெற்றிருந்தார்.
ஆனால் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிழையால் அவர் மிக உயர்ந்த மதிப்புள்ள விமானத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை தவறாக கியுபெக்கிற்கு கொண்டு வந்து வைத்ததாக விமான நிறுவனங்கள் குற்றம் சாட்டின.
அந்த விமானம் தற்போது ஷெர்ப்ரூக் (Sherbrooke) விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
2021 இல் பாரிஸ் நடுவர் மன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது; அதனை எதிர்த்து அவர் பலமுறை மேல்முறையீடு செய்தும் தோல்வியடைந்தார்.