கனடாவில் போலி ஆவணத் தயாரிப்பு மையம் சுற்றி வளைப்பு: இருவர் கைது
கனடாவின் கியுபெக் மாகாணத்தில் போலி அடையாள அட்டைகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் தயாரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆய்வகத்தை அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர்.
42 வயதான எவன்ஸ் எமில் மற்றும் 34 வயதான ரால்ஃப்-இசாய் லபாடி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஜோலியெட் நீதிமன்றத்தில் காணொலி வழியாக ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
அவர்களுக்கு போலி ஆவணங்கள் (அடையாள அட்டைகள் மற்றும் கிரெடிட் கார்டுகள்) தயாரித்தது மற்றும் “மற்ற நபர்களின் அடையாள தகவல்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது” போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மொன்றியல் நகரின் சாப்னெல் வீதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் பின்னர் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.
அந்த சோதனையில் சுமார் 1,000 போலி ஆவணங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் போலி ஓட்டுநர் உரிமம், கனடா குடியிருப்பு அட்டைகள்சுகாதார அட்டைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், சமூக காப்பீட்டு அட்டைகள் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
பறிமுதல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் மிக உயர்தரத்தில் தயாரிக்கப்பட்டிருந்ததால், சிறப்பு கருவிகள் இல்லாமல் அவற்றை கண்டறிவது மிகவும் கடினம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.