டிரம்ப்பின் புதிய வரி அச்சுறுத்தல்: நியாயமற்றது கியூபெக் முதல்வர்
கனடாவின் வைன், ஹாக்கி மட்டைகள் மற்றும் சிமெண்ட் உட்படப் பல பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 சதவீத புதிய வரியை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை "நியாயமற்றது மற்றும் கவலையளிப்பது" என கனடாவின் கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மதுபானங்களுக்குக் கனடா மாகாணங்கள் விதித்துள்ள தடைகள், அமெரிக்க சீஸ் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் கார்கள் மீதான வரிகளுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த புதிய அச்சுறுத்தல் குறித்து எக்ஸ் (X) தளத்தில் கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தின் புதிய வரி அச்சுறுத்தல்கள் நியாயமற்றவை மற்றும் கவலையளிப்பவை. நமது பொருளாதாரம், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க நான் தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்துள்ளார்.
விநியோக நிர்வாக அமைப்பைச் தளர்த்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை, அதில் நாங்கள் எந்த சமரசமும் இன்றித் உறுதியாக நிற்போம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கியூபெக் வணிகங்களுக்குத் தீர்க்கமான சூழல் தேவைப்படும் இந்த நேரத்தில், பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவது மிகவும் தவறான அணுகுமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.