அமெரிக்காவில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று; ஒரேநாளில் 1,762 பேர் பலி
அமெரிக்காவில் முன்னொருபோதும் இல்லாத அளவு திங்கட்கிழமை ஒரே நாளில் அரை மில்லியனுக்கும் அதிகமான புதிய கொவிட் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தொற்று நோய் தொடங்கியதில் இருந்து முன்னர் ஒருபோதும் இல்லாதளவு சாதனை மட்ட அதிகரிப்பாக இது பதிவாகியுள்ளது. திங்களன்று அமெரிக்காவில் 512,553 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், 1,762 பேர் கொரோனாவுக்கு பலியானதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் உறுதி செய்துள்ளன.
அத்துடன், நேற்று ஒரே நாளில் 254,496 புதிய கொவிட் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, கடந்த வாரத்தில், கிட்டத்தட்ட 16 இலட்சத்து 60,000 புதிய தொற்று நோயாளர்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளதுடன், ஒரே வாரத்தில் 10,000 க்கும் கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் சமீபத்திய தரவுகளின்படி ஞாயிற்றுக்கிழமை வரையான 7-நாட்களில் அமெரிக்கா முழுவதும் தினசரி சராசரியாக 206,000 தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தொற்று நோய் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்காவில் தினசரி சராசரி தொற்று நோயாளர் தொகை 4 இலட்சம் வரை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 52.9 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8 இலட்சத்து 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.