கனடாவில் 26 வயது இளைஞர் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது
சமூக வலைதளங்கள் வாயிலாகச் சிறுவர்களைத் தீவிரவாதப் பாதையில் திசைதிருப்ப முயன்றதாகக் கூறி, கியூபெக்கைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜெப்ரி ரூசல் (Jeffrey Roussel) என்ற அந்த இளைஞர் மீது பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பது மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்கு உடந்தையாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் 'டெலிகிராம்' (Telegram) செயலி மூலம் '764' என்ற பயங்கரவாத வலையமைப்பின் சித்தாந்தங்களைப் பரப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த வலையமைப்பானது கடந்த டிசம்பர் மாதம் கனடாவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
இது முக்கியமாக ரோப்ளாக்ஸ் (Roblox), டிஸ்கார்ட் (Discord), மின்கிராஃப்ட் (Minecraft) போன்ற சிறுவர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆன்லைன் கேமிங் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பதின்ம வயதினரைக் குறிவைத்துச் செயல்படுகிறது.
ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமலாக்கக் குழு (INSET) நடத்திய விசாரணையில், ரூசல் சமூக வலைதளங்களில் மிகக் கொடூரமான மற்றும் வன்முறையைத் தூண்டும் காட்சிகளைப் பதிவேற்றியது தெரியவந்துள்ளது.
வன்முறைச் செயல்களைச் செய்யத் தூண்டும் வகையிலும், புதிய நபர்களைத் தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதற்கும் அவர் இந்தத் தளங்களைப் பயன்படுத்தியுள்ளார்.