கனடாவின் ராணி என தன்னை கூறிக்கொண்ட பெண் உள்ளிட்ட 16 பேர் கைது
கனடாவின் ராணி என தன்னைத் தானே அழைத்துக் கொண்ட பெண் உள்ளிட்ட 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள ரிச்ச்மவுண்ட் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது தன்னை “கனடாவின் ராணி” என அழைத்துக் கொண்ட ரோமானா டிடுலோ (Romana Didulo) உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிடுலோ தலைமையிலான குற்றக் குழுவினர், 2023 செப்டம்பர் மாதம் முதல் அந்த கிராமத்தில் உள்ள பழைய பள்ளிக்கூடக் கட்டிடத்தில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 25ஆம் திகதி அங்கு ஒருவர் துப்பாக்கியுடன் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சுமார் 30க்கும் மேற்பட்ட பொலிஸ் வாகனங்கள் மற்றும் இரண்டு சிறப்பு தாக்குதல் வாகனங்கள் என்பனவற்றுடன் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
ரோமானா டிடுலோ, கோவிட் போராட்டங்களின் போது சமூக ஊடகங்களில் முன்னிலையாகி, தன்னை “கனடாவின் ராணி” என அறிவித்து, தீவிர சதி கோட்பாடுகளைப் பரப்பியவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் மற்றும் அவரது குழுவினர், காம்சாக் (Kamsack) நகரிலிருந்து வெளியேற்றப்பட்டு ரிச்ச்மவுண்டில் குடியேறினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் உள்ளிட்ட குழுவினர் கிராம மக்களை துன்புறுத்தியதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.