கனடாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு
கனடாவில் பாரிய அளவிலான போதைப் பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கனடிய பொலிஸார் நடத்திய இரண்டு மாதங்கள் நீடித்த விசாரணையின் பின்னர் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கனடா தபால் திணைக்களம் மூலம் அனுப்பப்பட்ட கஞ்சா பொருட்கள் தொடர்பான பெரும் வலைப்பின்னல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை, வடமேற்கு பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் அதிகளவு கஞ்சா மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் இருப்பதை கனடா தபால் திணைக்களம் கண்டறிந்ததன் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.

கனடிய பொலிஸார், எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம், கனடிய நிதி கொடுக்கல் வாங்கல் நிறுவனம் என்பன இணைந்து இணையதளம் வழியாக செயல்பட்ட குழுவை கண்டறிந்தது.
இந்த குழு இணையதளம் மூலம் கஞ்சா, கஞ்சா சார்ந்த பொருட்கள் மற்றும் psilocybin (மனஅழுத்தத்தை மாற்றும் போதைப்பொருள்) ஆகியவை கனடாவின் பல மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2026 மார்ச் 10ஆம் திகதி, ஒட்டாவா தெற்கு பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
485 கிலோ உலர் கஞ்சா, 36 கிலோ ஹாஷ், 18 கிலோ psilocybin காளான், 7,000க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் (edibles), முத்திரையிடப்படாத புகையிலை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 115,360 டாலர் பணமும் ஒரு வாகனமும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் பல சிறுவர்களை இலக்காகக் கொண்டு சந்தைப்படுத்தப்பட்டிருந்ததால், பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒட்டாவாவைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.