2ஆவது சுற்று பேச்சுவார்த்தைக்கு தயார்; யுக்ரைன் ஜனாதிபதி!
பெலாரஸில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையில், 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
யுக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் 6ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.
யுக்ரைன் தலைநகர் கியூவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் யுக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், போர் முடிக்கு கொண்டு வர யுக்ரைன்- ரஷ்யா இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு இராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யா தரப்புக்கு யுக்ரைன் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
மேலும் இந்த பேச்சுவார்த்தைகள் ஐந்து மணி நேரம் நீடித்ததாக ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் உதவியாளரும் அந்நாட்டு தூதுக்குழு தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி (Vladimir Medinsky) தெரிவித்துள்ளார்.