எங்கள் நகரங்களின் பெயர்களிலிருந்து இந்திய என்ற வார்த்தையை அகற்றவேண்டும்... கனடாவில் வலுப்பெறும் கோரிக்கை
கனடாவில் பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, தங்கள் நகரங்களின் பெயர்களை மாற்றவேண்டும் என்றொரு கோரிகை வலுப்பெற ஆரம்பித்துள்ளது.
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தபோது, தவறுதலாக அவர் தான் இந்தியாவைக் கண்டுபிடித்ததாக புரிந்துகொண்டார். ஆகவே அவர் அங்கிருந்த பூர்வக்குடியின மக்களை இந்தியர்கள் என்று அழைத்தார்.
ஆக, அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளில் உள்ள பூர்வக்குடியினர் இந்தியர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
அதேபோலத்தான் கனேடிய பூர்வக்குடியினரும் இந்தியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். தற்போது பூர்வக்குடியின குழந்தைகள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட விடயம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தங்களை இனரீதியாக அவமதிக்கும் வகையில் இந்தியர்கள் என அழைப்பதை பூர்வக்குடியினர் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, ஆல்பர்ட்டாவில் இந்தக் குரல்கள் பலத்து ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை Lethbridgeஇல் செலவிட்டவரான பூர்வக்குடியினரான Rosie Digout, தனது நகரின் பெயரில் இந்திய என்ற வார்த்தை அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேஸ்புக்கில் பிரச்சாரம் ஒன்றைத் துவக்கியுள்ளார்.
நாம் வாழும் சமுதாயத்தில் இனவெறுப்பு இன்னமும் தொடர்கிறது என்பதை நமது சமுதாயத்தினர் புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறும் அவர், காலங்கள் மாறிவிட்டன, வார்த்தைகளின் பயன்பாடும் மாறிவிட்டது.
ஆனாலும் மக்கள் நம்மை தலையில் இறகுகள் உள்ள தொப்பி அணிந்து குதிரையில் வலம் வருபவர்களாகவே பார்க்கிறார்கள், இந்த தோற்றம் மாறவேண்டும் என்கிறார்.
நகரில் வாழும் பெரும்பான்மை மக்களின் விருப்பமும் இதுவேதான் என்பதால், இன்னும் சில வாரங்களில், நகரின் பெயரை மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்க இருக்கின்றன.