அமெரிக்காவிற்கு புடின் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
உக்ரைனுக்கு அமெரிக்கா டாமஹாக் ஏவுகணைகளை வழங்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் எச்சரித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிந்தித்து செயல்பட வேண்டும்
உக்ரைனுக்கு அமெரிக்கா டாமஹாக் ஏவுகணைகளை அளிக்கக்கூடாது. அப்படி ஏவுகணைகள் அனுப்பப்பட்டு, அவை மூலம் ரஷ்ய நிலங்கள் தாக்கப்பட்டால், அதற்கான பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும். எனவே இந்த விவகாரத்தில் அமெரிக்கா சிந்தித்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
1,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கும் நீண்ட தூர, வழிகாட்டப்படும் க்ரூஸ் ரக ஏவுகணையான டாமஹாக்கை உக்ரைன் நீண்ட காலமாகவே அமெரிக்காவிடம் கோரி வருகிறது.
போரில் ரஷியாவை வெல்ல அத்தகைய ஆயுதங்கள் தங்களுக்குத் தேவை என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி வலியுறுத்திவருகிறாா்.

உக்ரைன் போருக்கு பேச்சுவாா்த்தை மூலம் முடிவு காண்பதில் இழுபறி நீடித்துவருவதால், அந்த நாட்டுக்கு டாமஹாக் ஏவுகணைகளை அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப்பும் கூறினாா். இருந்தாலும், அண்மையில் தன்னை நேரில் சந்தித்து பேசிய ஸெலென்ஸ்கியிடம், டாமஹாஸ் ஏவுகணைகளை அளிக்க தயாராக இல்லை என்று ட்ரம்ப் கூறினாா்.
இருந்தாலும், அந்த ஏவுகணைகளை அனுப்ப முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக மறுக்கவும் இல்லை. இந்த விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்காத சூழலில், புதின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.