இவரைப் பற்றிய தகவல் வழங்கினால் 10000 கனடிய டொலர்
ஒன்டாரியோ மாகாணத்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட் பகுதியில், 9 ஆண்டுகளாக காணாமல் போன டெரிக் ரிட்ஸ் தொடர்பான மர்ம வழக்கைத் தீர்க்க உதவும் தகவல்களுக்கு 10,000 கனடிய டொலர் பரிசு வழங்கப்படும் என ஸ்ட்ராட்ஃபோர்ட் காவல்துறை அறிவித்துள்ளது.
“ரிட்சி (Ritzy)” என நண்பர்களால் அழைக்கப்பட்ட 51 வயதான டெரிக் ரிட்ஸ், 2016 டிசம்பர் 31 அதிகாலை 1 மணியளவில், ஸ்ட்ராட்ஃபோர்டின் மேற்கே உள்ள சிறிய சமூகமான செப்ரிங்வில் (Sebringville) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து காணாமல் போனார்.
அவர் காணாமல் போனதாக கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்டாரியோ மாகாண காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

“அவர் நகைச்சுவை உணர்வு கொண்ட, அக்கறை நிறைந்த மனிதர். அவருக்கு சில பிரச்சினைகள் இருந்திருக்கலாம்; ஆனால் இப்படி நடக்க அவர் தகுதியற்றவர்” என டெரிக் ரிட்ஸின் நண்பர் ஷெல்லி ஸ்மித் தெரிவித்துள்ளார்.
100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை, பல்வேறு இடங்களில் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் நடத்தியதாக ஸ்ட்ராட்ஃபோர்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
டெரிக் ரிட்ஸின் இருப்பிடம் உறுதி செய்யப்படும், அல்லது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டனை பெற உதவும் எந்த தகவலுக்கும் 10,000 டொலர் பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
“சிறியதாக தோன்றும் தகவலாக இருந்தாலும், தயவுசெய்து முன்வருங்கள்”என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
519-271-4147 (Ext. 8184) என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.