அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளிக்கு தஞ்சமளித்த ரஷ்ய ஆதரவு நாடு
அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில் ஈடுபட்டு, நாட்டைவிட்டு வெளியேறிய நபருக்கு பெலாரஸ் நாடு அகதி அந்தஸ்து அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் கலிபோர்னியரான Evan Neumann என்பவரும் ஒருவர். இவர் குறித்த சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவான நிலையில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், Evan Neumann அமெரிக்காவில் இருந்து வெளியேறி உக்ரைனில் குடியேறினார். இந்த நிலையில் உக்ரைன் அதிகாரிகள் அவர் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதை அறிந்த Evan Neumann, அங்கிருந்து நடந்தே அண்டை நாடான பெலாரஸ் சென்றுள்ளார்.
ரஷ்ய ஆதரவு நாடான பெலாரஸ் தற்போது Evan Neumann-கு அகதி அந்தஸ்து அளித்து, அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு அளித்துள்ளது. அரசியல் தொடர்பான நெருக்கடி காரணமாகவே தம்மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறும் Evan Neumann, தற்போது பெலாரஸ் அரசாங்கம் தம்மீது அக்கறை காட்டுவது நிம்மதியை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெலாரஸ் அரசாங்கம் அவருக்கு அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களையும் புதிதாக அளித்துள்ளது. Evan Neumann மீது பொலிசாரை தாக்குதல் உள்ளிட்ட 14 பிரிவுகளில் வாஷிங்டன் பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.
மட்டுமின்றி, சமீபத்தில், இரண்டு வாரங்களுக்கு முன்பு, நீதிமன்றம் அவரை தலைமறைவானவர்கள் பட்டியலில் இணைத்து, அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.