பரபரப்பாகும் பிரிதானிய பிரதமர் தேர்தல்; ரிஷி சுனாக்கை முந்துகிறார் லிஸ் டிரஸ்!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்ததும், இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் (Rishi Sunak) உள்ளிட்ட அரசின் உயர் பதவியில் இருந்தவர்கள் பதவி விலகினர்.
இதனை தொடர்ந்து ஜான்சன், கடந்த 7 ஆம் திகதி பதவி விலகினார். எனினும், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் பதவியில் தொடருவார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் ஜான்சன் (Boris Johnson) இருந்த நிலையில், கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் (Boris Johnson) விலகிய நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறைகளும் நடந்து வருகின்றன.
இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டி வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்த நிலையில், 3 பேர் வாபஸ் பெற்றதனால், வேட்பாளர்கள் எண்ணிக்கை 8 ஆக இருந்தது.
இதில், ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த ஓட்டு பெறுவோர் வெளியேற்றப்பட்டு வந்ததனால், இறுதி போட்டியில் ரிஷி சுனாக் (Rishi Sunak) மற்றும் லிஸ் டிரஸ் (Liz Truss) வேட்பாளர்களாக மீதமுள்ளனர்.
அக்கட்சியின், 1.60 லட்சம் தொண்டர்கள் வாக்களித்து கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான தேர்தல் செப்டம்பர் 5ந்தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இரு வேட்பாளர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர். இதில், பொருளாதாரம், வரி உள்ளிட்ட விவகாரங்கள் மற்றும் அதற்கான திட்டமிடுதல் பற்றியும் பேசப்பட்டது.
இவர்கள் இருவரில் ஒருவர் ஆகஸ்டு 4 ஆம் திகதி முதல் செப்டம்பர் தொடக்கம் வரை நடைபெறும் வாக்கு பதிவில் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார்கள்.
இதுபற்றி யூகவ் என்ற அமைப்பு சார்பில் நடந்த சர்வே ஒன்றில், சுனாக்கை (Rishi Sunak) 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரஸ் (Liz Truss) வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தேர்தலில், 6 சதவீத உறுப்பினர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருப்போம் என தெரிவித்து உள்ளனர்.
இதனால், இங்கிலாந்தில் அடுத்த பிரதமர் தேர்தலுக்கான போட்டியில், ரிஷி சுனாக்கை (Rishi Sunak) விட வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் (Liz Truss) முன்னிலை பெறுவார் என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.